வலிமையான பாதுகாப்பு உள்ள வீடுகளில் திருடர்கள் நுழைய முடியாது. அதே போல நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி நன்றாக உள்ளவர்களை அடிக்கடி நோய்கள் தாக்காது. நாம் வாழும் சூழலும் வாழ்க்கை முறையுமே நம் நோய் எதிர்ப்பு சக்தியின் வலிமையை தீர்மானிக்கிறது. இவற்றில் உணவு முக்கியமானது. எந்தெந்த உணவுகளால் நமக்கு என்னென்ன சத்துகள் கிடைக்கின்றன என்று பார்க்கலாம்.
நோய் எதிர்ப்பு சக்தி வலிமையாக இருக்க வைட்டமின் ஏ அவசியம். பாலிஷ் செய்யப்படாத முழு தானியங்கள், பருப்பு வகைகள், மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிற காய்கறிகள், கோஸ் போன்ற இலை காய்கறிகள் ஆகியவற்றில் இது அதிகம் உள்ளது.
வைட்டமின் பி6 , பி12 போன்றவையும் அவசியம். பயறு வகைகள், கீரைகள் ,பழங்கள், கொட்டை வகைகள், சோயா பால், பால்பொருள்கள், மீன், இறைச்சி, முட்டை ஆகியவற்றில் இவை கிடைக்கின்றன. நோய் எதிர்ப்பு சக்திக்கு பிரதானமானது வைட்டமின் சி. ஆரஞ்சு ,எலுமிச்சை, கொய்யா,கிவி, நெல்லிக்காய், காலிபிளவர், தக்காளி, குடமிளகாய், புதினா ஆகியவற்றிலிருந்து இது நமக்கு கிடைக்கிறது.
தாவர எண்ணெய்கள், பச்சை இலை காய்கறிகள், பாதாம் போன்ற கொட்டை வகைகள் ஆகியன சாப்பிடுவதால் வைட்டமின் ஈ கிடைக்கிறது. முட்டை, மீன் மற்றும் பால் பொருட்களிலிருந்து வைட்டமின் டி கிடைக்கறது. தினமும் சிறிது நேரம் வெயிலில் நிற்பதாலும் நம் உடலின் வைட்டமின் டி அளவை அதிகரிக்கலாம்.
உணவு சமைக்கும்போது ருசியை போலவே உடல் ஆரோக்கியத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும். ஒவ்வொரு வேலை உணவையும் குறிப்பிட்ட நேரத்தில் சாப்பிட்டுவிடும் நியதியை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். பழங்கள் மற்றும் காய்கறிகளைப் போதுமான அளவு சாப்பிடுவதை உறுதி செய்ய வேண்டும்.